முனைக்காட்டின் வரலாறு

0
538

முனைக்காட்டின் வரலாறு

“மண்ணின் வரலாறு தெரியாதவர்கள்
மக்கள் வரலாறு தெரியாதவர்கள்”
அறிமுகம்
      இலங்கைத் திருநாட்டின் கிழக்கு மாகாணத்தில் மீனினங்கள் கவிபாடி குதூகலிக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் அக்காலத்தில் உலகநாட்சி ஆட்சி புரிந்த பிரதேசமாகவும் இயற்கையாக அழகுபடுத்தபட்டதுமாகவும் “தா” என்றால் இந்தா என்று வழங்கும் தாந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயம் அமைந்துள்ளதும். மண்முனைக்கு தென்மேற்கே அமையப்பெற்றுள்ள மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்டதும். சுயம்பு லிங்கமாய் தோன்றி இலங்கைத் திருநாட்டிற்கே பெருமை சேர்க்கின்ற தேரோடும் புனித தலமாம் கொக்கட்டிச்சோலை திருத்தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கு வடபுறமாக அமையப்பெற்றதும். கல்வி,கலை,செல்வம்,வீரம்,விளையாட்டு என அனைத்தும் ஒன்று கூடியதோடு இயற்கையால் அழகுபடுத்தப்பட்டதும் மேற்கே வாவிகளால் சூழற்பட்டு தன்புகழை உலகறியச் செய்த முதுபெரும் கிராமம் முனைக்காட்டுக் கிராமம் ஆகும்.

தோற்றமும் வளர்ச்சியும்
                        இக் கிராமத்தின் முதுமையை எடுத்துரைக்க அவ்விடம் தங்களை அழைக்கின்றேன். இவ் கிராமம் ஆரம்பகாலத்தில் காடுகளால் சூழற்பட்ட ஒரு பிரதேசமாக காணப்பட்டது. இங்கு மக்கள் குடியேற்றமானது கலிங்க ஒரிசா தேசத்தை ஆட்சி புரிந்த குகசேனனுடைய மகள் உலகநாச்சி என்பவள் கௌதமபுத்தரின் தசனத்தை தனது நெடுங்கூந்தனினுள் மறைத்துக் கொண்டு கைலயங்கிரியில் குகவம்சத்தார் முற்காலத்தில் எடுத்து வைத்திருந்த சிவலிங்கத்தையும் எடுத்துக் கொண்டு தனது சகோதரர் உலகநாதனுடன் வர்த்தகரின் கப்பலேறி இலங்கை வந்து இலங்கை அரசன் மேகவர்ணனிடம் (கி.பி.301-382) புத்தசாசனத்தை கொடுத்து அதற்கு பதிலாக மட்டக்களப்பு மன்னன் குணசிங்கனிடம் மண்முனை இராச்சியத்தை பெற்று கலிங்கசேத்திலிருந்து 106 குகக் குடும்பங்களை வரவளைத்து காப்பு முனைக்காட்டை அழித்து அங்கு அம்மக்களை குடியேற்றினாள். அவ் காப்பு முனைக்காட்டின் ஒரு பகுதியே தற்கால முனைக்காடாகும்.அக்காலத்தில் இவ் கிராமம் களப்பு பிரதேசமாக காணப்பட்டதால் இவ் கிராமத்தை “களப்பு முனை” என அழைத்தனர். பின் இப்பகுதியில் தான் பாதுகாப்பு வீரர்கள் தங்கள் ஆயுதங்கள்,முக்கியமான பொருட்களை இங்கு வைத்து பாதுகாத்து வந்திருக்கின்றனர். இதனால் களப்பு முனை என்கின்ற பெயர் மாற்றமடைய தொடங்கி “காப்புமுனை” என்கின்ற நாமம் உயிர்பெற்றது. இவ் காப்பு முனையில் வாழ்ந்த மக்கள் மிகவும் வீரம் படைத்தவர்களாகவும், எந்த செயலையும் உடன் செய்து முடிக்க கூடிய ஆற்றலும் மிக்கவர்களாக காணப்பட்டனர். காரணம்  இங்கு வாழ்ந்தவர்கள் பாதுகாப்பு வீரர்கள் ஆவர்.
      பின்னர்  இவ் காப்புமுனையில் வாழ்ந்த செல்வந்தர்கள் தங்களுடைய சொத்துக்களை பாதுகாக்கும் பொருட்டு அவற்றை பட்டறை கட்டி பாதுகாத்தனர். இவ் பட்டறைகளை பாதுகாப்பதன் பொருட்டு குறைந்த சம்பளத்திற்காக வேறு இடங்களில் இருந்து (குறிப்பாக வெல்லாவளி போன்ற பிரதேசங்களில்) சிலரை குடியேற்றினர் இதன் மூலமும் மக்கள் குடியேற்றம் இடம் பெற்றது. இங்கு பட்டறை கட்டி பொருட்களை பாதுகாத்தமையால் “பட்டறைத்தீவு” என அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. அத்தோடு இவ் பிரதேசம் மணல் நிறைந்த காடாக காணப்பட்டதால் “மணற்காடு” என அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
                                பிற்காலத்தில் போர்த்துக்கேயர் இலங்கையை ஆட்சி செய்கின்ற வேளையில் மண்முனைப்பிரதேசத்திற்கு வருகை தந்த போது காப்பு முனையில் இருந்த படை பாதுகாப்பு வீரர்கள் இவர்களை துரத்தி அடித்தனர். இதனால் கோபம் கொண்ட போர்த்துக்கேயர் காப்புமுனையில் இருந்து செல்பவர்களை விசாரிப்பர் விசாரித்து இடத்தை கேட்பர் அதற்கு அவர்கள் காப்புமுனை என்று பெயர் சொன்னால் அவர்களை தண்டிப்பர், துன்புறுத்துவர் இதனால் காப்புமுனை என்கின்ற பெயரை குறிப்பிடுவதற்கு பயத்தில் முனையும் காடும் சேர்ந்த பிரதேசமாக காணப்பட்டதால் இவர்கள் முனைக்காடு என்ற பெயரையே அழைத்தனர். இதனால் இன்றைக்கும் அப்பெயரே நிலைத்துள்ளது.
பின்னர் தற்காலத்தில் சின்ன முனைக்காடு என அழைக்கப்டும் பிரதேசத்தில் படிப்படியாக குடியேற்றம் நிகழ்ததாக கூறப்படுகின்றது. இவ்வாறாக குடியேற்றங்கள் இடம்பெற்று மக்களது தொகையும் அதிகரிக்க தொடங்கி பின் வந்த காலத்தில் மண்முனையை மையமாக வைத்து தற்கால மண்முனை தென்மேற்கு பிரதேசத்தை 11வட்டாரங்களாக பிரித்தனர் அதில் முனைக்காடு 7ம் வட்டாரம் எனவும் 8ம் வட்டாரம் எனவும் பிரிக்கப்பட்டது. ஆனால் பின் வந்த காலத்தில் அதுவும் மாற்றமடைந்து தற்காலத்தில் மண்முனை தென்மேற்கு பிரதேசம் 24கிராமசேவை பிரிவுகளை கொண்டதாக காணப்பட அதில் முனைக்காடு 04 கிராம சேவகர் பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது அந்தவகையில் முனைக்காடு வடக்கு,முனைக்காடு கிழக்கு, முனைக்காடு தெற்கு,முனைக்காடு மேற்கு போன்ற கிராம சேவகர் பிரிவைக் கொண்டதாகவும்.
கோயில்கள்
“கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்”
                       முதுபெரும் கிராமமாகிய முனைக்காட்டுக் கிராமத்தில் நான்கு ஆலயங்கள் அமையபெற்று கிராமத்திற்கு எழுச்சியையும்,வளர்ச்சியையும் தந்து கொண்டிருக்கின்றது. அவ்வகையில் முனைக்காடு மேற்கு கிராமசேவகர் பிரிவில் ஸ்ரீ கொட்டாம்புலைப்பிள்ளையார் ஆலயமும், முனைக்காடு கிழக்கு கிராமசேவகர் பிரிவில் ஸ்ரீ சித்தி விநாயகர் கண்ணகை அம்மன் ஆலயமும், முனைக்காடு தெற்கு கிராமசேவகர் பிரிவில் ஸ்ரீ வீரபத்திரர் ஆலயமும் முனைக்காடு வடக்கு கிராமசேவகர் பிரிவில் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயமும் அமைப் பெற்று மக்களின் குறைகளை தீர்த்து அருள்மழை பொழிந்து கொண்டிருக்கின்றது.
பாடசாலை
                        சமூகத்தின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பதற்கு கல்வி அக்கல்வியை பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு இடம் பாடசாலை அவ்வகையில் முனைக்காட்டுக் கிராமத்தில் தற்காலத்தில் இரண்டு பாடசாலைகள் காணப்படுகின்றன அவையாவன மட்/முனைக்காடு விவேகானந்த வித்தியாயலம், மட்/சாரதா வித்தியாலயம் இவ்விரண்டு பாடசாலைகளும் எமது கிராமத்தில் அமையப்பெற்று எம் கிராமத்தின் பெருமையை எங்கும் எடுத்தியம்பிக் கொண்டிருக்கின்றது.
அவ்வகையில் மட்/முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தின் வரலாற்றை நோக்கும் போது. இப்பாடசாலை 1923ம் ஆண்டு தை மாதம் முதலாம் திகதி (1923.01.01) ஆரம்பித்து இக்கிராமத்தைச் சேர்ந்த திரு.வெள்ளையப்போடி என்பவர் காணிகொடுத்து உதவிசெய்ய இக்கிராமத்தைச் சேர்ந்த முருகப்பன் உடையார் என்பவர் களிமண்,சுவர், தென்னோலைக்கூரை ஆகியவற்றுடன் ஒருகட்டத்தை கட்டி ஆரம்பித்தனர். பிற்காலத்தில் பாடசாலையை தொடர்ந்து நடத்துவதற்கு மி~னறிமாரே பல வழிகளிலும் உதவினர் ஆதலினால் இப்பாடசாலைக்கு மெதடிஸ்த மி~ன் தமிழ் கலவன் பாடசாலை எனப் பெயர் சூட்டப்பட்டது. பிற்காலத்தில் மட் முனைக்காடு விவேகானந்த வித்தியாலயம் எனப் பெயர் சூட்டப்பட்டதோடு தற்காலத்தில் தரம் 01 தொடக்கம் 13ம் வகுப்பு வரையான மாணவர்கள் கல்வி கற்கின்றனர். தற்காலத்தில் இப்பாடசாலையில் 847மாணவர்கள் கல்வி கற்கின்றனர். எமது கிராமத்தின் வளர்ச்சியில் இப்பாடசாலை பெரும் மைக்கல்லாக விளங்குகின்றது.
மட்/முனைக்காடு சாரதா வித்தியாலயம்
 
இப்பாடசாலையானது 2010.01.03ம் திகதி அமைக்கப்பட்டது இங்கு தற்காலத்தில் தரம் 01 தொடக்கம் தரம் 03 வரையான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர் இப்பாடசாலை வளர்ச்சி பெற்று வருகின்ற ஒரு பாடசாலை ஆகும்.
பாலர் பாடசாலை
                    கல்வி வளர்ச்சியில் பாலகர்களுக்குரிய கல்விகளை சிறப்பாக வழங்குகின்ற ஒரு இடம் பாலர் பாடசாலை ஆகும். இப்பாலர் பாடசாலைகள் ஆரம்காலத்தில் வீடுகளிலும் ஒருசில பொது இடங்களிலும் வைத்து கல்வி கற்பிக்கப்பட்டன தற்காலத்தில் வேள்ட்வி~ன் நிறுவனத்தின் அனுசரனையுடன் இரண்டு பாடசாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று முனைக்காடு தெற்கு கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ளது. மற்றையது முனைக்காடு வடக்கு கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ளது. இப்பாடசாலைகள் மாணவர்களுக்கு இலவச கல்வியை வழங்கிக் கொண்டிருக்கின்றது.
அமைப்புக்கள்
•     நாகலிங்கேஸ்வரர் ஆலய பரிபாலனசபை
•     கொட்டாம்புலைப்பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலய பரிபாலன சபை
•     சித்தி விநாயகர் கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபை
•     வீரபத்திரர் ஆலய பரிபாலனசபை
•     இந்து இளைஞர் மன்றம்
•     நாகசக்தி இந்து இளைஞர் மன்றம்
•     சிவசக்தி இந்து இளைஞர் மன்றம்
•     அறநெறி பாடசாலை
•     துளி அருவி
•     எழு தளிர்
•     முனைக்காடு வடக்கு கிராம அபிவிருத்திச் சங்கம்
•     முனைக்காடு கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கம்
•     முனைக்காடு தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கம்
•     முனைக்காடு மேற்கு கிராம அபிவிருத்திச் சங்கம்
•     இளைஞர் கழகங்கள்
•     மாதர்சங்கம்
•     மகளீர் மன்றங்கள்
விளையாட்டு
                            இக்கிராமத்தில் தங்களது பொழுதை இனிதாக கழிப்பதற்காகவும் தங்கள் திறமைகளை வெளிக்கொணரும் முகமாகவும் பாரம்பரியத்தை வெளிக்கொணர்கின்ற பல பாரம்பரிய விளையாட்டுக்களும் விளையாடி மகிழ்ந்தனர் அவ்விளையாட்டுக்களை நோக்கும் போது.
•     காளை அடக்கல் – தங்களுடைய மாடுகளுடன் குழுமாட்டினை விட்டு              மான் தோலினால் செய்யப்பட்ட கயிற்றை                         மாட்டின் காலில் போடுதல் இதை                             பார்த்திருப்பவர்கள் அதை போடவிடாமல் மந்திரத்தால்        தடுத்தல்.
•     கிட்டிப்புல்
•     வார்
•     பிள்ளையார்கட்டை
தற்காலத்தில் இவ்விளையாட்டுக்கள் மருவிச் செல்கின்றமை வேதனைதரும் விடயமாக அமைந்துள்ளதுடன் தற்காலத்தில் உதைபந்தாட்டம், கிறிக்கட்,வொலிபோல், வலைபந்து போன்ற விளையாட்டுக்களிலே நாட்டம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.
போக்குவரத்து
 
இக்கிராமமானது இரண்டு பக்கங்கள் வாவிகளால் சூழற்பட்ட ஒருகிராமம் தென்பகுதி கொக்கட்டிச்சோலை கிராமம் அமைந்துள்ளது. இவ் கொக்கட்டிச்சோலை கிராமத்தின் ஊடாக வருவதற்கு பாதை அமையப்பெற்றுள்ளது. அதுபோல கிழக்கே முதலைக்குடா கிராமம் அமையப்பெற்றுள்ளது. அவ்கிராமத்தின் ஊடாகவும் முனைக்காட்டுக்கு வரமுடியும் அதுபோல ஆரம்பகாலத்தில் மேற்கே அமையப்பெற்றுள்ள காஞ்சிரங்குடா ஆற்றின் ஊடாக தோணி மூலம் பயணம் செய்யந்திருந்தனர். இவ்வாறாக இக்கிராமத்திற்கான போக்குவரத்து அமையப்பெற்றுள்ளது.
கலாசாரம்
•     இங்கு வாழ்ந்த மக்கள் வீரசைவத்தினையுடைய மக்களாக காணப்பட்டனர் இவர்களது உடை ஆண்கள் வேட்டி சால்வை பெண்கள் சாரி  அணிந்து காணப்பட்டனர் தற்காலத்தில் இதனுடைய பாவனைவீதம் குறைவடைந்து செல்கின்றது.
            இவ்வாறாக எமது முனைக்காட்டுக் கிராமத்தின் வரலாற்றை எடுத்துயதுயம்ப முடிகின்றது.
உசாத்துணை :-      மட்டக்களப்பு மாண்மியம் (F.X.C.நடராஜா)
                                    கிழக்கிலங்கை ப10ர்வீகவரலாறு (க.தங்கேஸ்வரி)
                                    திரு. கனகநாயகம் (ஓய்வுபெற்ற அதிபர்)
                                   திரு.ஆ.கந்தப்போடி(ஊர்பெரியார்)
முற்றும்.
தொகுப்பு:- வ.துசாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here