பாலிப்போடி நல்லதம்பி

0
420

வயிரமுத்து துசாந்தன்


தமிழர் பாரம்பரிய கலைகளில் வசந்தன் கூத்தும் சிறப்பான ஒன்றாக மக்களோடு இணைந்திருக்கின்றது. சிறுவர்களே பெரும்பான்மையாக நடிக்கும் வசந்தன் கூத்தில். பெரியவர்களும் பங்கேற்று நடித்தமையையும் அறியக்கூடியதாகவும் காணக்கூடியதாகவும் இருக்கின்றது. தற்காலத்தில் சிறுவர்கள் மீது பாலர் பருவத்தில் இருந்து சுமத்தப்படுகின்ற கல்விச்சுமையாலும், நவீன தொடர்பாடலினாலும் இக்கலைகள் மீது சிறுவர்கள் தங்கள் கவனத்தை செலுத்துவதில் ஆர்வமற்றவர்களாக காணப்படுகின்றனர். இதனால் இக்கலை தமிழர்களிடமிருந்து முற்றாக அருகிவிடுமோ? என்ற சந்தேகங்களும் எழத்தொடங்கியிருக்கின்றன. இவ்வாறான வசந்தன் கலையை உயிரூட்டிக் கொண்டிருக்கும் கலைஞர்களையும் மறந்துவிடவும் முடியாது. அவ்வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முனைக்காடு கிராமத்தில் பிறந்து 48வருடங்களாக கலையில் பயணிக்கும் பாலிப்போடி நல்லதம்பி அவர்களின் பயணத்தை பார்ப்போமா?
பாடசாலைப் பருவத்திலே வசந்தன் கலைக்குள் புகுந்த நல்லதம்பி வசந்தன் கூத்தில் ஆடி பின்பு அதனை பயிற்றுவிக்கும் ஆசானாகவும் தன்னை வளர்த்துக் கொண்டார். 1956.01.09ல் பிறந்த நல்லதம்பி தனது 11வயதில் பாடசாலையில் கல்வி கற்கும் போது அவரது ஆசான் சின்னையா அவர்களால் வசந்தன் கலைக்குள் உள்வாங்கப்பட்டு பிள்ளையார் வசந்தன், களரி வசந்தன், குறத்தி வசந்தன், கூவாக்குயில் வசந்தன், முசுத்து வசந்தன், பள்ளு வசந்தன், சிங்கி வசந்தன், அனுமார் வசந்தன், அம்மன் பள்ளு ஆகிய வகையிலான வசந்தன் கூத்தினை பயிற்றுவித்திருக்கின்றார். வசந்தன் கூத்தினை பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் இருக்கின்ற மாணவர்களை கொண்டு பயிற்றுவிக்கும் இவர் முதலைக்குடா மகா வித்தியாலயம், முனைக்காடு விவேகானந்த வித்தியாலயம், கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலயம், ஆகிய பாடசாலை மாணவர்களுக்கு பயிற்றுவித்ததோடு, கலைக்கழக கலைஞர்களுக்கும் பயிற்றுவித்து வருவதாக குறிப்பிடும் மதுரக்கவியோன் நல்லதம்பி. வசந்தன் கலையோடு மட்டும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் கிராமிய பாடல்களை பாடுதல், சமூகசீர்திருத்த கூத்துக்களை எழுதுதல், காவியம் எழுதுதல் போன்ற துறைகளிலும் தன்னை ஈடுபடுத்தி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
1978ம் ஆண்டு பாரிய சூறாவளி அனர்த்தம் மட்டக்களப்பு மாவட்டத்தை தாக்கியபோது இதனால் மக்கள் தமது பொருளாதாரங்களை இழந்தும், உயிர்களையும் இழந்து வாடிய சந்தர்ப்பத்தில் அச்சூழல் குறித்து காவியங்களும், பாடல்களும், கூத்துக்களும் எழுந்தன. அவ்வகையில் சூறாவளி சுப்பன் கூத்து ஒன்றினை எழுதி ஆடுவதற்கு நல்லதம்பியும் உதவியதாக இருந்து செயற்பட்டதாக கூறும் இவர் அதில் இடம்பெறும் பாடல் வரிகள் சிலவற்றையும் குறிப்பிட்டார்
“மட்டக்களப்பிலே மண்டியிட்டு அடித்துமே அம்பாரை தன்னிலே அரைவாசை அழிக்குதே!
பொலநறுவைக்கு போகுகின்ற போதிலே நாவற்குடாவிற்கு வந்தேன்.
கல்லடி தன்னை புள்ளடி போட்டுமே காஞ்சிரங்குடாவையும் காட்டோடு சேர்க்குதே
நாவலடி தன்னை நாசமதாக்கியே நாவற்குடாவையும் நாடி வந்தேனே.

கொக்கட்டிச்சோலையில் மக்கட்டி நின்றுமே கொத்தியாபுலைக்கு நான் குறுக்காலே போகின்றேன்
இலுப்படிச்சேனையில் இருந்துமே புறப்பட்டேன் இன்னும் சில ஊர் போகின்றேன் கேளும்.
ஆட்டுப்பட்டியெல்லாம் அடியோடு அழித்துமே மாட்டுப்பட்டிகளை மலையோடு ஏத்துறேன்.
நாட்டுமக்களே நன்றாக கேளுங்கோ ஒவ்வொரு வருடமும் உண்மையாய் வருகுவேன்.

இக்கூத்தானது நகைச்சுவையான முறையில் அமைந்திருந்ததாக குறிப்பிட்ட நல்லதம்பி அவர்கள் இதற்குள்ளே சூறாவளியால்; ஏற்பட்ட இழப்பு, கிடைத்த உதவி, மக்கள் மனநிலை, சம்பவம் இடம்பெற்ற போது மக்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் போன்றவற்றை சித்தரிப்பதாக இக்கூத்து அமைத்து ஆடி அரங்கேற்றியதாகவும் அதே போன்று சமூகத்தில் இடம்பெறும் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றினை விழிப்பூட்டும் வகையில் சமூகசீர்திருத்த கூத்துக்கள் சிலவற்றை எழுதி ஆடியதாகவும் குறிப்பிட்டார். கூத்துக்கலையின்பால் அக்காலத்து மக்கள் கொண்டிருந்த ஆர்வமும், ரசனையும் காரணமாக மக்கள் மத்தியில் பிரச்சினைகளையும் முன்வைக்க கூடியதாகவிருந்தது. இதனால் சமூகசீர்கேடுகள் மிகவும் குறுகிய அளவிலே காணப்பட்டது. ஆனால் தற்காலத்தில் நவீன தொழிநுட்ப முறையினாலும், சினிமாவின் ஆட்கொள்ளலாலும் பல சீரழிவுகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதனால் பலர் மனநிம்மதி அற்றவர்களாகவும், வாழ்வை தொலைத்தவர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இப்பிரதேசத்தில் கலைகளின் பால் ஈர்க்கப்பட்டவர்களும், கவிதை, கிராமிய பாடல்கள், கூத்துக்கள், காவியங்களை எழுதிய படைப்பாளர்களை பார்க்கின்றபோது இவர்கள் கல்வியில் உயர்ந்தவர்கள் அல்ல குறைவான தரங்களையே கற்றவர்கள் பலர் கல்வி கற்காமலும் இருக்கின்றார்கள் ஆனாலும் இவர்களது படைப்புக்கள் தற்கால பேராசிரியர்களால் கூட படைக்க முடியாத படைப்புக்களாக இருக்கின்றன. அவ்வாறன திறமையானவர்கள் என்பது அவர்களது செயற்பாடுகள் நிருபித்துக் காட்டுகின்றன.

அவ்வகையில் சின்னையா, முத்துலிங்கம், மாணிக்கப்போடி, மாசிலாமணி, மூத்ததம்பி, சின்னத்தம்பி ஆகியோரை குருவாக கொண்டு கலையை பயின்று இளம் தலைமுறைக்கு பயிற்றுவித்து கொண்டிருப்பதற்காகவும், இவரது கலைச்சேவையை பாராட்டியும், வசந்தன் கூத்தினை இன்றுவரை இப்பிரதேசத்தில் மங்கிவிடாது பாதுகாத்துக் கொண்டிருப்பதற்காகவும், இவரின் குரல் தொனியையும் கொண்டு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளது. அவ்வகையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் 2012ம் ஆண்டு மக்கள் கலைமுதுசொம் என்ற விருதும், பட்டிப்பளைப்பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தினால் கிராமிய கலைச்சுடர் விருதும், முனைக்காடு கலைக்கதிர் கலா மன்றத்தினால் பக்தி குரலோன் போன்ற சிறப்பு பெயரையும், முதலைக்குடா ஏகதந்தன் அபிவிருத்தி சங்கத்தினால் வசந்தன் புகழ் என்ற பெயரும், முனைக்காடு விவேகானந்த விpத்தியாலத்தால் மதுரக்கவியோன் என்ற பட்டத்தையும் வழங்கி இருப்பதாகவும் அண்மையில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தினால் வசந்தன் கலைசெம்மல் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

வசந்தன் கூத்தோடு மட்டும் நின்றுவிடாது காவியத்திலும் கால்பதித்து உருத்திரப்பெருமான் காவியத்தையும் எழுதியிருப்பதாக குறிப்பிட்டார்.

மக்கள் பொழுதுபோக்கு கலையாகவும், வரவேற்பு கலையாகவும், சிறுவர் மகிழ்ச்சி கலையாகவும் விளங்கும் இக்கலையை அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்வதில் பல சிரமங்களை தான் எதிர்கொண்டிருப்பதாகவும் தன்பின்னால் நின்று இக்கலையை முன்னின்று கொண்டு செல்வதற்கு இளம் தலைமுறை கைகோர்க்காத சூழலினாலும், தற்போது பிரதேசத்தில் ஓரிரு வகையிலான வசந்தன் கூத்துக்களே ஆடப்பட்டு வருகின்றதாகவும் இன்னும் பல இளம்தலைமுறைகள் தன்பின்னால் வருகின்ற நிலையில் அவற்றை பயிற்றுவித்துவிடுவதாகவும் குறிப்பிட்டார். இவ்வாறு கலைமீது ஆர்வம் கொண்டு செயற்படும் இக்கலைஞர்களை பாராட்டி வாழ்த்தி நிற்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here