வேலாச்சி வல்லிபுரம்

0
356

வயிரமுத்து துசாந்தன்
தம் சமூகத்தினுடைய பாரம்பரிய கலையின் இருப்பை நிலை நிறுத்த உழைக்கும் கலைஞனின் நோக்குதமிழரின் பாரம்பரிய கலைகள், தமிழர் விளையாட்டுக்கள் பல மறைந்து கொண்டிக்கின்றது. அன்றைய தமிழ் சமூகம் பாரிம்பரிய கலைகளுடனும், விளையாட்டுக்களுடனும் தங்களது பொழுது போக்குகளை கழித்தனர். அவை அவர்களது உடலுக்கு உடற்பயிற்சியாகவும் அமைந்திருந்தமையுடன் உடல் நிலையிலும் உடல்வருத்தங்கள் ஏற்படாது பாதுகாத்தது. ஆனால் தற்காலத்தில் கலைகளும் மறைந்து விளையாட்டுக்களும் ஒடுங்கி செல்கின்ற நிலையினால் உடற்பயிற்சி இன்றி பல்வேறு உடல் வருத்தங்களை கொண்டவர்களாகவும், உடற்பயிற்சிக்கென இயந்திரங்களையும் கொள்வனவு செய்பவர்களாக இருக்கின்றனர்.

இளம் சமூகத்திலும் பாரம்பரிய கலைகள், விளையாட்டுக்கள் எவை என்று கேட்டால் பதில் தெரியாதவர்களாக திண்டாடுபவர்களாக இருக்கின்றனர். அதேநேரம் புதிதாக வெளிவந்துள்ள சினிமா படம் எது என்றால்? கேள்வி கேட்டு முடிவதற்கு முன்னமே பதில் வந்துவிடுகின்றது. இவை பிழை என்று கூற முற்படவில்லை புதியதை பார்த்தாலும் எமக்கான பாரம்பரிய கலைகளையும் தக்க வைக்கவேண்டியதும் தேவையாகின்றது. பாரம்பரிய கலைகளை வளர்ப்பதற்கு சிறுவர்களும், இளைஞர்களும் இணைந்து நின்றால்தான் முதியோர்களால் அவற்றை இளம் தலைமுறைக்கு விட்டுச்செல்ல முடியும்.

ஆரம்ப காலங்களில் தமிழ்ப் பெருமன்னர்களாலும், கிராமங்கள் தோறும் இருந்த அமைப்புக்களாலும், குழுக்களாலும் வளர்த்தெடுக்கப்பட்ட இந்தக் கலை அம்சங்கள் இன்றைய காலத்தில் ஆதரிப்பார் குறைவின்றி இருப்பதினால் அழிவடையும் நிலையில் இருக்கின்றன.
முன்னைய காலத்தில் மக்களின் பொழுது போக்கு அம்சங்களாக தொலைக்காட்சிகளும், ஈஸ்ட்மெண்ட் கலர் படங்களும் இருந்த போது அவற்றுக்கு நிகரான அதே அந்தஸ்த்தினைப் பெற்ற பொழுது போக்கு அம்சங்களாக கூத்தும், மற்றும் இதர தமிழர்களின் கலைகளும் சிறந்து விளங்கின. காலஞ் செல்லச் செல்ல வீட்டுக்கு வீடு தொலைக்காட்சி, கணனி, என்ற நிலைமை உருவாகத் தொடங்க, இலத்திரனியல் ஊடகங்களின் வருகையானது தமிழர்களின் வீடுகளின் நுழை வாயிலை அலங்கரிக்கத் தொடங்கியது. இதனால் எம்முடைய அரும் பெரும் சொத்தான பாரம்பரியக் கலைகள் எம்மை விட்டு அந்நியப்பட ஆரம்பித்துள்ளன.

தமிழர் கலைகள் அழகுசார் கலைகளாகவும், அழகியல் உணர்வுமிக்கதாகவும் விளங்குகின்றது. கலைகள் பொழுதுபோக்காக மட்டுமின்றி அக்கலைகளின் ஊடாக பல்வேறு புராண, இதிகாச கதைகளும் வெளிக்கொணரப்பட்டதுடன் மக்கள் மனங்களில் இலகுவாக பதியக்கூடிய நிலையில் செய்யப்பட்டது. இதனால் செய்தியொன்றை ஊடுகடத்தும் ஊடகமாகவும் கலைகள் செயற்பட்டன.

போட்டிமிக்க சூழலிலும், நவீனத்துவ காலத்திலும் தம்வேலை தம்தொழில் என்று செயலாற்றிக் கொண்டிருக்கும் சமூகத்தின் மத்தியில் பாராம்பரிய கலைகளை வளர்த்தெடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கும் இக்கலைஞர்கள் தங்களையும் தங்கள் நேரங்களையும் தியாகம் செய்து இவ்வாறான கலைகளை உழைப்பிற்காக அன்றி தச் சமூகத்தின் பாராம்பரிய கலை நிலைபேறுக்காக உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறான கலைஞர்களை வெளிக்காட்ட வேண்டியதும் தேவையாகின்றது. அதேநேரம் வாழும் போது இவ்வாறானவர்கள் வெளிக்கொணரப்படவேண்டியதும் அவசியமாகின்றது.
அந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பகுதியில் மகிழடித்தீவு கிராமத்தில் வசித்துக் கொண்டிருக்கும் முதிய கலைஞரும் கலாபூசணம் விருதி பெற்றவருமான வேலாச்சி வல்லிபுரம் அவர்களின் கலைப்பயணம் பற்றி ஆராய்ந்த போது. 1939ம் ஆண்டு பங்குனி மாதம் 30திகதி பிறந்த இவர் ஆடல், பாடல், தாளம் போன்றவற்றில் திறமையானவர்.

தனது 10வயதில் கலைக்குள் பிரவேசித்தார். பாடசாலைப் பருவத்திலே கூத்துக்கலையில் இராமநாடகத்தில் இல~;சுமணன் எனும் பாத்திரத்தில் நடித்த இவர் பின் தொடர்ச்சியாக தனது கல்வியை தொடரமுடியாத நிலையிலும் ஊக்கப்படுத்த யாரும் இல்லாததினால் தரம் 08ல் கல்வியை நிறுத்தி தொழில்களில் ஈடுப்பட்டார். அவ்வகையில் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் தொழில் புரிந்து பின்பு மீண்டும் 18வயதில் தனது வீட்டுக்கு சென்ற இவர் அப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற தொழிலான விவசாய தொழிலை மேற்கொண்டு வரும் போது இப்பிரதேசத்தில் கூத்துக்கள் ஆடுவது இப்பிரதேசத்து மக்களது வழக்கமாக இருந்தது.

அந்தநேரங்களில் கூத்து இடம்பெறும் இடங்களுக்கு இப்பிரதேசத்து மக்கள் சென்று பார்வையிடுவது வழமை அதேநிலையில் சிறுவர்கள், இளைஞர்கள் கூத்தைப்பார்ப்பது மட்டுமல்லாது அவற்றை ஆடியும் அங்குப்பாடப்படும் பாடல்களை கேட்டும் மனனம் செய்து கொள்வதுடன் வீதியாலும் வீடுகளிலும் இவ்வாறான பாடல்களை பாடிச்செல்வதுமுண்டு அதேபோன்று அங்கு அண்ணாவியாரால் வாசிக்கப்படும் மத்தாளத்தினை பார்த்து அதுபோன்று ஓலைப்பெட்டிகளிலும், கலன்களிலும், ஓசை தரும் பொருட்களில் தாளமிட்டு பழகுவதும் அக்காலத்தில் இடம்பெற்றது. அதற்கு விதிவிலக்கலாத வல்லிபுரமும் ஓசைதரும் பொருட்களில் தாளமிட்டு கூத்திற்கு தாளம் சிறிது வாசிக்க கூடிய வகையில் இருந்தார்.

மகிழடித்தீவு கிராமத்தில் அல்லிநாடகம் கூத்து இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது இவரும் அவ்விடம் சென்று கூத்தினை பார்ப்பதுமுண்டு இவ்வாறு கூத்து இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வேளை தொடர்ச்சியாக ஒரு அண்ணாவியாரே மத்தளம் வாசித்துக்கொண்டிருந்ததாகவும் அந்நிலையில் பக்கத்தில் இருந்தவர் வல்லிபுரம் மத்தளம் வாசிப்பார் எனக்கூற அண்ணாவியார் வல்லிபுரத்திற்கு சந்தர்ப்பத்தை வழங்கியதாகவும் அதுதான் தனக்கு கிடைத்த மத்தளம் வாசிப்பதற்கான சந்தர்ப்பம் எனவும் குறிப்பிட்டார். அப்போது அவருக்கு வயது பத்தொன்பது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கூத்து ஆடுவதில் அக்கரை கொண்ட இவர் சுபத்திரை திருமணம், மகாபாரத்தின் 17ம், 18ம் கூத்துக்களில் கிருஸ்ணர் பாத்திரமேற்று நடித்துள்ளார். கூத்துக்களில் ஆடியதோடு நின்றுவிடாது கூத்துக்களை பழக்குவதிலும் ஆர்வம்காட்டி அனுபுத்திரன், சாமேந்திரநாடகம், அங்கசுந்தரி நாடகம், காலணை வென்ற காரிகை, வாளவீமன் நாடகம், இரணியசங்காரம், சாத்தியவான் சாவித்திரி, மறலியைவென்ற மங்கை, நொண்டி போன்ற கூத்துக்களையும் பழக்கியுள்ளார். கூத்தோடு நின்றுவிடாது கரகம், கும்மி, வசந்தன், ஆனந்தக்கூத்து போன்றவற்றையும் சிறுவர்களை கொண்டு பழக்கி அரங்கேற்றியுள்ளார். மேலும் இசைக்கருவிகள் வாசிப்பதிலும் ஆர்வம்காட்டிய இவர் மத்தளம், தவில், உடுக்கை, தபேலா, புல்லாங்குழல், பறைமேளக்குழல் போன்றவற்றை வாசிப்பதிலும் வல்லவராக திகழ்கின்றார். தற்போது எழுபத்தியாறு வயதினை உடைய இவர் கடந்த 2012ம் ஆண்டு சுபத்திரை திருமணம் கூத்தில் கிருஸ்ணர் பாத்திரமேற்று நடித்திருந்தமையையும் குறிப்பிடத்தக்கது.

கலாபூசணம் வல்லிபுரம் அவர்கள் சில வருடங்களாக கூத்துப்போட்டிகளில் கலந்து நடுவனம் புரிந்து கொண்டிருக்கின்றமையும் இங்கு எடுத்துக்கூறத்தக்கது. அவ்வகையில் தமிழ்மொழித்தினப்போட்டி, மாவட்ட செயலகத்தால் நடாத்தப்படும் போட்டி, பிரதேச கலாசார போட்டி, கல்வி அபிவிருத்தி சங்கத்தினால் நடாத்தப்படும் போட்டி, கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தினால் நடாத்தப்படும் போட்டி போன்றவற்றில் நடுவனமும் புரிந்துள்ளார்.
கலையில் சிறந்து விளங்கிய இவர் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். அவ்வகையில் பட்டிப்பளைப்பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தினால் மத்தளம் வாசித்தலுக்கான கிராமிய கலைச்சுடர் விருது 2011ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தினால் கலாசார விழா 2012ம் ஆண்டு சிறந்த கூத்துக்கலைஞர் விருது வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் 2012ம் ஆண்டு நடைபெற்ற அண்ணாவியார் மாகாநாட்டில் தலைக்கூத்தர் விருதும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2012ம் ஆண்டு மார்கழி மாதம் 26ம் திகதி கலாபூசணம் விருதும் பெற்றுள்ள இவர் தற்போதும் கலையை வளர்க்க வேண்டும் என்ற சிந்தனையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். இவ்வாறான மூத்த கலைஞர்களிடமிருந்து எமது பாரம்பரியத்தை பெற்றெடுக்க வேண்டியதும் அவசியமாகின்றது.

கலைகளின் ஊடாக விட்டுக்கொடுப்பு, தலைமைத்துவம், கீழ்பணிவு, சமூக ஒற்றுமை, சிறந்த ஒழுக்கமுள்ள சமூதாயம் போன்ற பல்வேறு பண்புகளை வளர்க்கும் திறன் வாய்ந்த கலையை இளம் சமூதாயத்திற்கு கொண்டு செல்லும் மறைவாய் வாழ்ந்து கொண்டிருக்கும் இவ்வாறான மானிடர்களை வெளிப்படுத்தி நிற்பதில் பெருமை கொள்கின்றோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here