நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொறுப்பு அரசியல்வாதிகளின் கைகளிலே தங்கியுள்ளது  

0
386
செ.துஜியந்தன்
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பாரியபொறுப்பு அரசியல்வாதிகளின் கைகளிலே தங்கியுள்ளது. சமூகத்தில் பிரச்சினைகள் எழுகின்றபோது முதலில் அப்பகுதி பிரதேச அரசியல்வாதிகளின் கவனத்திற்கே செல்கின்றது. அப் பிரச்சினையை தூண்டிவிடுவதாக இருந்தாலும் சரி சமாதானமாகப் போவதாக இருந்தாலும் சரி அது அவ் அரசியல் தலைவர்களின் கைகளிலேதங்கியுள்ளது.
இவ்வாறு கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலாளர் க.லவநாதன் தெரிவித்தார். பிரதேச நல்லிணக்க குழுவின் ஏற்பாட்டில் நல்லிணக்கம் தொடர்பான கலந்துரையாடல் கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பிரதேச நல்லிணக்க குழுவின் இணைப்பாளர்களான ; சமாதான நீதவான் வே.தங்கவேல், சமாதானநீதவான் எஸ்.காந்தரூபன் ஆகியோரது ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் காத்தமுத்து கணேஸ் உட்பட மாநகரசபையின் தமிழ் உறுப்பினர்கள் பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் கிராமசேவகர்கள், உத்தியோகஸ்தர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இங்கு பிரதேச நல்லிணக்க குழு கடந்த காலங்களில் ஆற்றிய சேவைகள் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது. அங்கு பேசிய பிரதேச செயலாளர் க.லவநாதன்…
சமூகத்தில் அமைதியான சூழல் இருக்கவேண்டும். சமூகத்தில் அமைதி நிலவ வேண்டுமானால் மக்களிடையே நல்லிணக்கத்தை கட்டியெழுப்பவேண்டும். தனிப்பட்ட மனிதர்களுக்குள்ளும், குடும்பங்களுக்குள்ளும், சமூகங்களுக்குள்ளும், நாட்டிலும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அப் பிரச்சினைகளுக்கு எல்லாம் சுமுகமான தீர்வுகாணப்படவேண்டும்.; இனங்களை, மதங்களை, மொழிகளை, மற்றவர் கலாசாரங்களை இழிவுபடுத்தும் வகையிலான செயற்பாடுகளை தவிர்க்கவேண்டும். இந் நாட்டில் நடந்த கடந்தகால அனுபவங்களை வைத்துக்கொண்டு அதனூடாக கலந்துரையாடி பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும்.
நாட்டு மக்களிடையே நல்லிணக்கத்தை கொண்டுவரவேண்டிய பாரிய பொறுப்பு அரசியல்வாதிகளின் கைகளிலே தங்கியுள்ளது. அரசியல்வாதிகள் நினைத்தால் நிச்சயம் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பமுடியும். எந்தவொரு பிரச்சினைக்கும் மனம் விட்டுப்பேசினால் தீர்வு கிடைக்கும். பிரதேசத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு இவ்வாறு நல்லிணக்க குழ மூலம் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க முடியும். நாம் அனைவரும் இன, மத, மொழி வேறுபாடுகளை களைந்து மனிதாபிமானத்துடன் மனிதர்கள் என்றவகையில் பயணிக்கின்றபோது நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here