சிறப்பு நேர்காணல் : டெங்குநோய்க்கான நுளம்பை அழிக்கும் பொறிமுறையொன்றை கண்டுபிடிப்பதே எனது அடுத்த இலக்கு! இலங்கையின் வியத்தகுசாதனையாளர் வினோஜ்குமார் கூறுகிறார்.

0
594

 

சிறப்பு நேர்காணல்:

டெங்குநோய்க்கான நுளம்பை அழிக்கும் பொறிமுறையொன்றை
கண்டுபிடிப்பதே எனது அடுத்த இலக்கு!
இலங்கையின் வியத்தகுசாதனையாளர் வினோஜ்குமார் கூறுகிறார்.

உலகிற்கு இன்று சவாலாக உள்ள டெங்குநோயை ஏற்படுத்தும் நுளம்பை அழித்தொழிக்கும் நவீன பொறிமுறையொன்றை கண்டுபிடித்து உலகிற்கு வழங்குவதே எனது அடுத்த இலக்கு.

இவ்வாறு கூறுகிறார் இலங்கை புத்தாக்குனர் வரலாற்றில் முதற்தடவையாக ஏழு பதக்கங்களைப் பெற்று வியத்தகு வரலாற்றுச்சாதனைபடைத்த இளம்விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமார்.

கிழக்கின் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை கோரக்கர்கிராமத்தைச்சேர்ந்த யாழ்.பல்கலைக்கழக தமிழ்மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமார் இதுவரை 86கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்துள்ளார். இவற்றில் 38 கண்டுபிடிப்புகள் தேசியமட்டத்தில் விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளன. 03 கண்டுபிடிப்புகள் சர்வதேசவிருதுகளைப்பெற்றுள்ளன.

அவர் பல்கலைக்கழகமட்ட போட்டியில் வழங்கப்பட்ட முதல் 9தங்கப்பதக்கங்களில் 3தங்கப்பதக்கங்களைச் சுவீகரித்துள்ளார். அத்துடன் 1 வெள்ளி 3வெண்கலப்பதக்கங்களைச் சுவீகரித்துள்ளார்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த மூளைசாலியை வெளியுலகிற்கு வெளிக்காட்டவேண்டுமென்பதற்காக நேர்காணலொன்றை மேற்கொண்டேன்.

அவர் வழங்கிய நேர்காணல் இதோ..

வினா: டெங்கு நோயை ஏற்படுத்தும் நுளம்புகளை அழிப்பது தொடர்பில் புதிய அறிவியல் கண்டுபிடிப்பை மேற்கொள்ளவிருப்பதாகக்கூறினீர்கள். எவ்வாறு செய்யப்போகிறீர்கள்?
விடை: குறித்த நுளம்புகள் விரும்பும் பொருட்களை அதன் டிஎன்ஏ யை ஆய்வுசெய்து அதனூடாக அவற்றை கவர்ந்திழுத்து ஒரு மூடிய தொகுதியில் ஒட்சிசனை இல்லாமல்செய்கின்றபோது அவை இறக்கும். இம்முயற்சியில் இறங்கி இன்றுடன் 776 நாட்களாகின்றன. தினமும் இது தொடர்பில் முயன்றுதவறி மீளமுயற்சித்தவற்றை குறிப்புப்புத்தகத்தில் பதிவிட்டுவருகிறேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. விரைவில் இதில் வெற்றியடைவேன்.

வினா: டெங்கு நுளம்பை ஒழிக்கும் இச்செயற்பாட்டை தேர்ந்தெடுத்தன்காரணம் என்ன?
விடை: 2012முதல் இந்த டெங்குநோயின் தாக்கம் அதிகரித்துவருகிறது. வருடாந்தம் நாட்டில் இந்நோயினால் 2500பேர் பாதிக்கப்பட்டுவருவதோடு 300-350பேரளவில் இறந்தும் வருகிறார்கள். 2016இல் 600பேரளவில் இறந்துள்ளனர். மிகவும் மோசமானநிலை. சுகாதாரஅமைச்சு இதற்கென விசேட பிரிவொன்றை ஸ்தாபித்து செய்ற்பட்டுவருகிறது. என்றாலும் டெங்கு நின்றபாடில்லை. எனவே இதற்கு நிரந்தர தீர்வைக்காணவேண்டும் எனற்நோக்கிலே இம்முயற்சியிலே இறங்கியுள்ளேன். இதற்காக தேசியவிஞ்ஞான மன்றத்தில் பதிந்து ஆக்கவுரிமைப்பத்திரம் பெற்று தேசிய புலமைச்சொத்து காரியாலயத்தில் அனுமதிபெற்று கடந்த 776நாட்களாக இவ்வாய்வைச்செய்துவருகின்றேன். வெற்றிகிட்டும். அதனூடாக அரிதான பல மனிதஉயிர்களைக்காப்பாற்றிய பணியை செய்தவன் என்பதில் மனப்பூரிப்படைவேன்.

வினா: தாங்கள் கடந்தவாரம் நிலைநாட்டிய வரலாற்றுச்சாதனை பற்றிக்கூறுங்கள்?

விடை: கடந்த 26ஆம் திகதி இலங்கை ஆய்வாளர்கள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கொழும்பு பி.எம்.ஜ.சி.எச்சில் நடைபெற்ற 3வது தேசிய புத்தாக்குனர் தின விருதுவழங்கும்விழாவில் நான் இம்முறை 3தங்கம் 1வெள்ளி 3வெண்கலம் என்று 7பதக்கங்களையும் பெற்றேன். அதற்கான பரிசாக 4லட்சத்து 40ஆயிரம் ருபா பணத்தையும் பெற்றேன்.

வினா:இதற்கு முந்திய சாதனை எது?

விடை: இதற்கு முதல் இறுதியாக 2012ஆம் ஆண்டில் கனிந்துநாணயக்கார என்ற கண்டுபிடிப்பாளர் 5பதக்கங்களைப்பெற்று தனியொருவர் உச்சக்கட்டச்சாதனை படைத்திருந்தார். 2தங்கம் 1வெள்ளி 2வெண்கலம் என 5பதக்கங்களைப்பெற்றிருந்தார்.அதுவே இறுதியாகவிருந்த சாதனை.

வினா: யார் முன்னிலையில் இப்பதக்கங்கள் வழங்கப்பட்டன?
விடை: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வி;ஞ்ஞான தொழினுட்ப ஆராய்ச்சி திறன்அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர் சரத்அமுனுகம இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன இலங்கை புத்தாக்கனர் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி மகேஷ்எதிரிசிங்க அமைச்சின்செயலாளர் திருமதி வசந்தாபெரேரா ஆகியோர் முன்னிலையில் இப்பதக்கங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

வினா: இப் போட்டி இலங்கையில் எவ்வாறு நடைபெற்றுவருகிறது?
விடை: இலங்கை ஆய்வாளர்கள் ஆணைக்குழு வருடாவருடம் இப்போட்டியை நடாத்திவருகின்றது. இது பாடசாலை மட்டம் பல்கலைக்கழக மட்டம் திறந்த மட்டம் என 3மட்டங்களில் நடைபெறும். மொத்தமாக தங்கம் வெள்ளி வெண்கலம்என 3மட்டங்களில் 76 பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

பல்வேறு மதிப்பீடுகளை பேராசிரியர்களால் பார்வைக்குட்;படுத்தப்பட்டு 85புள்ளிகளுக்கு மேல் பெற்ற கண்டுபிடிப்புகளுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படுவதுவழக்கம். அந்தவகையில் பாடசாலை மட்டத்தில் 6தங்கப்பதக்கங்களும் பல்கலைக்கழக மட்டத்தில் 9தங்கப்பதக்கங்களும் திறந்த மட்டத்தில் 11தங்கப்பதக்கங்களும் இம்முறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வினா: பதக்கத்திற்கான பணப்பரிசுகள் எந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றது?
விடை:தங்கப்பதக்கமொன்றிற்கு 1லட்சருபாவும் வெள்ளிப்பதக்கத்திற்கு 50ஆயிரம் ருபாவும் வெண்கலப்பதக்கத்திற்கு 30ஆயிரம் ருபாவும் பணப்பரிசாக வழங்கப்பட்டுவருகின்றது.

வினா: இம்முறை 9கண்டுபிடிப்புகளை போட்டிக்காக சமர்த்திருந்ததாகக்கூறினீர்கள். அவை பற்றிக்கூறமுடியுமா?
விடை:பாதணிகளில் தூசு படியாத உறை இலகுவாக கம்பிகளை இணைக்கும் கருவி பெரிய வாகனங்களின் சில்லுகள் மற்றும் அதிகளவான முறுக்குத்திறன் தேவையான பொருட்களை இலகுவாக கழற்றும் கருவி வினைத்திறனான நிறப்பூச்சுத் தூரிகை கழிவான பாட்டாக்களிலிருந்து மீள்சுழற்சி செய்யப்பட்ட பைவர் இரண்டு சக்கரங்களுடைய உதவியாளன் சூழல் நேய மீள்சுழற்சிப் போத்தல் வீட்டு நீர்சேமிப்புத் தாங்கியில் இருக்கும் நீரின் சுத்தத்தைப் பேணும் கருவி மற்றும் கடல் நீரின் மூலம் விவசாயம் செய்யும் முறை போன்ற ஒன்பது கண்டுபிடிப்புக்களாகும்.

வினா: இந்த 9இல் எந்த 3கண்டுபிடிப்புகளுக்கு தங்கப்பதக்கங்கள் கிடைக்கப்பெற்றன?
விடை: பாதணிகளில் தூசு படியாத உறைஇ இலகுவாக கம்பிகளை இணைக்கும் கருவிஇ இரண்டு சக்கரங்களுடைய உதவியாளன் ஆகிய 3க்கும் கிடைத்தது.

வினா: கண்டுபிடிப்புகளுக்கு அதிகம் செலவாகுமே? வசதிகுறைந்த குடும்பத்திலுள்ள தங்களுக்கு இது முடிகிறதா? யாராவது உதவி செய்கிறார்களா?
விடை: ஆம். எனது படைப்புகளைக்கண்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலர் நிறைய உதவிவருகின்றனர். குறிப்பாக அன்பேசிவம் அமைப்பு அறம் அமைப்பு அவுஸ்திரேலியா குகபாலன் சேர் இவ்வாறு பலர். பலர் தங்களது பெயர்களைக்கூறவேண்டாம் என்றும் கேட்டுள்ளனர்.
வினா: உதவிகள் பலமாக இருக்கிறதே. நீங்கள் தங்களைப்போன்ற கஸ்ட்டப்பட்ட மாணவர்;களுக்கு உதவுகிறீர்களா?
விடை: நிச்சயமாக. மாதமொன்றுக்கு சுமார் 5லட்சருபா அளவில் பல்கலைக்கழகம் சென்றுள்ள என்போன்ற கஸ்ட்டப்பட்ட மாணவர்கள் 76பேருக்கு மாதாந்தம் உதவிவருகிறேன்.

வினா: அப்படியா? நல்லவிடயம். எங்குள்ள மாணவர்களுக்கு எவ்வாறு நிதியை பிரித்து வழங்குகிறீர்கள்?
விடை: மலையகம் வடக்குகிழக்கு என நாடுபூராக ஏழை வறிய கஸ்ட்டப்பட்ட மாணவர்கள் 76பேரை இனங்கண்டு அவரவர் பீடத்தைப்பொறுத்து தொகையைவழங்கிவருகிறேன். உதாரணமாக வைத்தியபீடம் பொறியியல்பீடமெனின் மாதம் 8ஆயிரம் ருபாவையும் ஏனைய பீடங்களுக்கு 3000ருபாவையும் வழங்கிவருகிறேன். இவையனைத்தும் புலம்பெயர் சமுக உறவுகளுடைய நிதிதான். எனது நிதியல்ல.

வினா: இந்தக்கண்டுபிடிப்புகளை எவ்வாறு கண்டுபிடிக்கமுடிகிறது?
விடை: ‘நான் ஓய்வு நேரங்களில் எமது சூழலில் காணப்படும் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றை ஒரு குறிப்புப் புத்தகத்தில் எழுதி அது பற்றி சிந்தித்து மாதிரிகளை உருவாக்குவேன். அதன்பின் அதனை செம்மைப்படுத்தி முழுமையாக இயங்கும் அமைப்பாக தயாரிப்பேன். அதனை ஆராய்ந்து அது முன்னர் வேறொரு நபரினால் உருவாக்கப்படாதவிடத்து அதற்கு ஆக்கவுரிமைப் பத்திரத்திரத்திற்கு விண்ணப்பித்து அதனை பெற்றுக்கொள்வேன்

அதன்பின்னர் போட்டிகளுக்கு சமர்ப்பிப்பேன். போட்டிகளில் வெற்றிபெறுவது எனது பிரதான நோக்கமல்ல.
வினா: வெற்றிபெறுவது நோக்கமில்லாவிட்டால் உங்கள் இலக்குத்தான் என்ன?
விடை: எனது பல்கலைக்கழக படிப்பு முடிந்தவுடன் அதனை இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழு தேசிய விஞ்ஞான மன்றம் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் வர்த்தக அமைச்சுக்களுடனும் இணைந்து அதனை வணிகமயப்படுத்துவதே பிரதான நோக்கமாகும்.

வினா: உங்கள் கண்டுபிடிப்புத்துறைக்குதவியவர்களுக்கு நன்றகூற முற்பட்டால் யாருக்கெல்லாம் நன்றிகூறுவீர்கள்?

விடை:எனது பாடசாலைகளான சம்மாந்துறை ஶ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் யாழ்.பல்கலைகழகத்திற்கும் தொடர்ந்தும் எனக்கு உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகின்ற ‘அன்பே சிவம்’ அறப்பணி அமைப்பிற்கும் இலங்கை புத்தாக்குனர் ஆணையாளர் மகேஸ் எதிரிசிங்க கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சந்தன ஜயரத்ன தென்கிழக்குப் பேராசிரியர் அப்துல் மஜிட் முசாதிக் ருகுணு பல்கலைக்கழக பேராசிரியர் புத்திக்க சேர் யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர் கந்தசாமி யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர் சிந்துஜா ஐங்கரன் கிழக்குமாகாணக்கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் உதவிக்கல்விப்பணிப்பாளர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா மற்றும் உதவிகள் புரிந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் பணிவன்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

வினா: மேற்படிப்பு மற்றும் எதிர்காலம் பற்றி என்ன உத்தேசித்துள்ளீர்கள்?

விடை: எனது தற்போதைய முதல்பட்டத்திற்குப்பின் வெளிநாடுசென்று புத்தாக்குனர் கண்டுபிடிப்புத்துறையில் முதுமாணிப்பட்டம் பெறவேண்டும். சமுகத்திற்குத்தேவையான டெங்குநோய் நுளம்பு ஒழிப்பு போன்ற முக்கிய துறைகளில் கண்டுபிடிப்பைமேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் 7 எனக்க புலமைப்பரிசிலோடு படிக்கவாய்ப்புதரமுன்வந்துள்ளன.

வினா: தேசியவிருதைப்பெற்ற நீங்கள் சர்வதேசவிருதுக்கு முயற்சிசெய்யவேண்டுமே. அதுபற்றி..
விடை: நிச்சயமாக. நான் இவ்வாண்டு பெப்ருவரியில் சர்வதேசவிருதுக்காக தாய்லாந்து சென்றிருந்தேன். அங்கு 97நாடுகிளன் 1000பல்கலைக்கழக மாணவர்கள் பங்குபற்றினர். எனது கணித உதவியாளன் என்ற கண்டுபிடிப்புக்கு சர்வதேசவிருதுகிடைத்தது. இம்முறையும் சர்வதேசவிருதுக்காக தங்கப்பதக்கம் வென்றோர் சர்வதேச அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு போட்டிக்கான தகுதிகாண் போட்டிக்கு டிசம்பரில் முகம்கொடுப்போம். அதில்தெரிபடும் மூவர் அடுத்தவருடம் பெப்ருவரியில் செல்வோம்.
;.
வினா: உங்கள் கண்டுபிடிப்புத்துறை பற்றி இளம்சந்ததியினருக்கு என்னகூறவிளைகிறீர்கள் ?
விடை: பாடசாலையிலும் பல்கலைக்கழகங்களிலும் இத்துறை பற்றி விழிப்புணர்வூட்டப்படவேண்டும். பாடசாலை பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்கள் தங்கள் ஓய்வு நேரங்களில் புத்துருவாக்க செயற்பாடுகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கின்றேன். அவ்வாறு ஆர்வமானவர்களையும் ஊக்குவித்து வருகின்றேன் அதன்ஒருகட்டமாக நாம் சில வலயங்களுக்குச்சென்று பாடசாலைகளில் இதுபற்றிக்கூறிவருகின்றோம். பல்கலைக்கழகங்களில் புத்தாக்கநிலையங்களை அமைக்க ஆலோசனைவழங்கியதன்பேரில் கொழும்பு மொறட்டுவ யாழ்ப்பாணம் போன்ற பல்கலைக்கழகங்களில் இந்நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அடுத்தடுத்த காலங்களில் ஏனைய பல்கலைக்கழகங்களிலும் நிறுவப்படும். அதனுடாக இத்துறையை வளர்க்கலாம். சமுதாயத்தையும் காப்பாற்றலாம்.

நேர்கண்டவர்: வி.ரி.சகாதேவராஜா காரைதீவு நிருபர்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here