கிழக்குமாகாண கல்வி நிர்வாகசேவை நியமனங்களும் : பின்பற்றபடாத சேவைபிரமாணக்குறிப்பும்

0
846

இலங்கை கல்வி நிர்வாக சேவையில் உள்ளோர்களுக்கு வழங்கப்படுகின்ற நியமனங்கள் முறையானதா? இல்லை, கல்வி நிர்வாக அதிகாரிகளுக்கு அநீதி இழைக்கப்படுகின்றதா? என்பது தொடர்பில் தற்போதைய சூழலில் ஆராயவேண்டிய தேவையும் இருக்கின்றது. கிழக்கு மாகாணம் கல்வி ரீதியாக பின்நிலையில் நிற்கின்றமையினையும் அவதானிக்க வேண்டிய நிலையுள்ளதுடன், இதற்கு பலரின் தலையீடுகளும் உள்ளதா? என்பது தொடர்பிலும் ஆராயவேண்டியும் உள்ளன.

1928ஃ28ஆம் இலக்கம் – 2015 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் திகதி அரசாங்க ஆணைப்படி அரச சேவை ஆணைக்குழு. செயலாளர், டி.எம்.எல்.சீ. சேனாரத்னவினால் வெளியிடப்பட்ட கல்வி நிர்வாக சேவை பிரமாணக்குறிப்பில் கல்வி நிர்வாகசேவையில் பதவி வகிக்க கூடிய பதவிகள் தொடர்பிலும், அவர்களது தரங்கள் தொடர்பிலும் விரிவாக கூறப்பட்டுள்ளன. அதற்கமைய கிழக்கு மாகாண கல்வி நிர்வாகசேவைக்கான பதவிகள் உரிய சேவைபிரமாணக்குறிப்பினை பின்பற்றி வழங்கப்பட்டுள்ளதா? என்பது கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டிய விடயமே.

2015.04.17ம் திகதி முதல் செல்லுபடியாகும் வகையில், வெளியிடப்பட்ட இச்சேவை பிரமாணக்குறிப்பில், தரம் – 111, தரம் – 11, தரம் – 1, விசேடதரம் ஆகிய வகையில் இப்பதவிக்கான தரங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுள்ளும் பொதுஆளணி, விசேட ஆளணி என இருவகையிலானவர்கள் உள்வாங்கப்படுகின்றனர். இதனுள் குறிப்பாக இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் ii மற்றும் தரம் iii விசேட ஆளணிக்குரிய உத்தியோகத்தர்களுக்கு பொது ஆளணிக்குரிய பதவிகளை வகிக்க முடியாதென தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் ii மற்றும் iii பொது ஆளணிக்குரிய உத்தியோகத்தர்கள் விசேட ஆளணியினருககுரிய பதவிகளை வகிக்க முடியாதெனவும் சேவைப்பிரமாணக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண கல்விநிர்வாக நியமனங்களின் போது, இவ்விடயம் கருத்தில் கொள்ளப்படவில்லையென்ற குற்றச்சாட்டுக்களும் பலரிடத்தில் இல்லாமல் இல்லை. விசேட ஆளணிக்குரியவர்கள் தற்காலத்தில் பொதுஆளணிக்குரிய பதவிகளை வகித்துக்கொண்டிருக்கின்றனர். இதனால் பொதுஆளணிக்குரியவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்ற கருத்துக்களும் நிலவுகின்றன.

பொது ஆளணிக்குரியவர்கள், விசேட ஆளணிக்குரியவர்கள் எப்பதவிகளை வகிக்க முடியுமென ஆராய்கின்றபோ, பொது ஆளணிக்குரியவர்கள், கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (பண்பு சார்அபிவிருத்தி), கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (கொள்கை, திட்டமிடல் மற்றும் செயல்திறன் மீளாய்வு), பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், கல்வி வெளியீடுகள் ஆணையாளர் நாயகம், பிரதான ஆணையாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர், அதிபர் (பொதுவான பதவியணி), கல்வி அமைச்சின் கல்விப் பணிப்பாளர், கல்வி சேவைகள் அமைச்சின் கல்விப் பணிப்பாளர், மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், பரீட்சைகள் ஆணையாளர், கல்வி வெளியீடுகள் ஆணையாளர், மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர், வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர், பிரதிஃஉதவிக் கல்விப் பணிப்பாளர் மாகாணக் கல்வி அபிவிருத்தி நிலையங்கள், பிரதிஃஉதவிக் கல்விப் பணிப்பாளர் மாகாணக் கல்வி அபிவிருத்தி நிலையங்கள், மாகாணப் பாடசாலை அதிபர் (தென், மேல்), பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர்ஃஉதவிப் பரீட்சைகள் ஆணையாளர் ஆகிய பதவிகளை வகிக்கமுடியும். இப்பதவிகளை விசேட ஆளணிக்குரியவர்கள் வகிக்கமுடியாதென சேவைப் பிரமாணக்குறிப்பு சுட்டிக்காட்டுகின்றது.

கல்வி அமைச்சின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் பதவியினை பொதுவான பதவியணியனரும் உதவிக் கல்விப் பணிப்பாளர் பதவியினை விசேட பதவியணியினரும், கல்வி சேவைகள் அமைச்சின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்ஃஉதவிக் கல்விப் பணிப்பாளர் பதவியினை விசேட பதவியணியினரும், பிரதி கல்வி வெளியீடுகள் ஆணையாளர் / உதவி கல்வி வெளியீடுகள் ஆணையாளர் பொதுவான பதவியணியினரும், விசேட பதவியணியினரும், மாகாணக் கல்வித் திணைக்கள உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் விசேட பதவியணியினரும், வலய உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் பதவியினை விசேட பதவியணியினரும் வகிக்க முடியுமென சேவைப்பிரமாணக்குறிப்பு கூறுகின்றது.

விசேட பதவியணியின் கீழ் நியமனம் பெற்ற உத்தியோகத்தர்களை, தரம் ii இற்குப் பதவியுயர்த்தும் போது, அவர்கள் விசேட பதவியணியின் கீழேயே பதவியுயர்த்தப்படுவர் எனவும் சேவைப்பிரமாணக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வி நிர்வாக சேவையின் நியமனங்கள், வகிக்ககூடிய பதவிகள் மேற்சொன்னவாறு குறிப்பிட்டு நிற்க நியமனங்கள் இவற்றிற்கு முரணானதாகவும் வழங்கப்படுகின்றமை ஏற்புடையதா? என்ற வினா ஒருபுறமாகவிருக்க, குறித்த பதவிகளுக்கான நியமனங்களின் போது, குறித்த தரத்தினைச் சேர்ந்தவர்கள் இல்லாதபட்சத்தில் அதற்கு அடுத்ததாக உள்ள தரத்தில் உள்ளவர்களை சேவையில் ஈடுபடுத்தமுடியும் என்பதனை சுற்றிக்கை சுட்டிக்காட்டி நிற்கின்றது. குறிப்பாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் பதவிக்கு, ஆளுனரால் பெயர்குறிப்பிடுகின்ற அதிகாரிஒருவரும் அங்கம் வகிக்கின்ற நேர்முகப்பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்படுகின்ற இலங்கை கல்வி நிர்வாகசேவை 1ம் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவார். அதேபோன்று மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர், வலயக்கல்விப் பணிப்பாளர் பதவிகளுக்கு இலங்கை கல்வி நிர்வாகசேவை 1ம் வகுப்பு அதிகாரிகள் மாகாண அதிகாரிகளால் நியமிக்கப்படுவர். இவர்கள் பொது ஆளணியினைச் சேர்ந்தவர்களாகவே இருப்பர்.

வெற்றிடமாக உள்ள பதவிகளுக்கு சேவையின் உரிய தரத்தில் போதியளவு உத்தியோகத்தர்கள் இல்லாத சந்தர்ப்பங்களில் அடுத்த தரத்திற்குரிய அதிகாரிகளில் இருந்து அவர்களது சேவைமூப்பு திறமை அடிப்படையில் நேர்முகப்பரீட்சையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின் மாகாண அதிகாரிகளினால் நியமிக்கப்படுவர். குறிப்பாக மாகாண கல்விப்பணிப்பாளர், மேலதிக மாகாணக்கல்விப் பணிப்பாளர், வலயக்கல்விப் பணிப்பாளர், வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஆகிய இதுபோன்ற பொதுஆளணி பதவிகளுக்கு பொதுஆளணியில் உள்ள தரத்தினரே நியமிக்கப்பட வேண்டும்.

ஒருநாட்டின் மிக முக்கிய தூணாக இருக்ககூடிய கல்விதுறையில் அநீதிகள் ஏற்பட்டு, ஒட்டுமொத்த நாட்டிற்கும் இழுக்கினை ஏற்படுத்திவிடாது, சிறந்த கல்வி நிர்வாகசேவையினை முன்னெடுத்து, கல்வியின் மூலமாக நாட்டினை கட்டியெழுப்ப அனைவரும் முன்வரவேண்டுமென்பதுடன், உரிய அமைச்சுக்களும், அதிகாரிகளும் இவ்விடயங்களை கருத்தில்கொண்டு அநீதி இழைக்கப்பட்டுள்ள நிர்வாகசேவை நியமனங்கள் தொடர்பிலும் ஆராய்ந்து, உரிய அதிகாரிகளுக்கு இடத்தினைக் கொடுப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

கே.ஏரம்பமூர்த்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here